அன்னை ராபியா அறக்கட்டளை

Saturday, January 14, 2017

அன்னை ராபியா அறக்கட்டளை தொடக்க விழா மற்றும் கல்வி கருத்தரங்கம்

அன்னை ராபியா அறக்கட்டளையின் தொடக்கவிழாவும், கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கமும் புளியங்குடி ஹஸனத்துல் ஜாரியா அரபிப் பாடசாலை வளாகத்தில் வைத்து 07-01-2017 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

அப்துல் ரசாக் இறை வசனங்களை முன்மொழிய விழா இனிதே தொடங்கியது. அன்னை ராபியா அறக்கட்டளையின் அறங்காவலர் அபுதாஹீர் வரவேற்புரை வழங்கினார். விழாவின் முதல் நிகழ்வாக அன்னை ராபியா அறக்கட்டளையின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் அறக்கட்டளையின் முத்திரையை உதவிப் பேராசிரியரும் மாணவர்கள் நல ஆர்வலருமான முஹம்மது ரஃபீக் வெளியிட, மொழிப் பிரியன் அப்துல் ஹமீது பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து நடைபெற்ற கல்வி கருத்தரங்கில் உதவிப் பேராசிரியர் முஹம்மது ரஃபீக்  10 மற்றும் 12-ஆம் வகுப்பிற்குப் பிறகு என்ன படிக்கலாம்? கல்வி உதவித் தொகைகளின் விபரங்கள், பள்ளி மாணவர்களுக்கான போட்டித் தேர்வுகள், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள் என்னென்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார். உரையைத் தொடர்ந்து மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும்  போட்டித் தேர்வுகள் கல்வி உதவித் தொகைகள் குறித்த கேள்விகள் கேட்கும் வாய்ப்புத் தரப்பட்டது. பலரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர்.

அடுத்ததாக, மொழிப் பிரியன் அப்துல் ஹமீது அவர்கள் குழந்தைகளின் புத்திக் கூர்மையை மேம்படுத்துவது எப்படி? என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மொழிப் புயல் மஹ்மூத் அக்ரம் சிறுவயதில் பல மொழிகளைக் கற்றுக் கொள்வது எப்படி? என்ற தலைப்பில் உரையாற்றத் தொடங்கினார்.

அவர்   தனது உரையில் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் உகந்த உணவுகள் என்னென்ன? எந்தெந்த உணவுகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்? இந்த வயதிலேயே பல மொழிகளைக் கற்றுக் கொண்டது எப்படி? மற்றவர்கள் கற்றுக் கொள்வது எப்படி? என்பதைப் பற்றி விரிவாகப் பேசினார். அவரது உரை அரங்கில் கூடியிருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தியும், நினைவுப் பரிசு வழங்கியும் கௌரவிக்கப்பட்டது. அத்தோடு ஊடகத் துறையில் வளர்ந்து வரும்  குறும்பட இயக்குநர் காஜா மைதீன் அவர்களும் அன்னை ராபியா அறக்கட்டளையின் சார்பாக கௌரவிக்கப்பட்டார். விழாவில் புளியங்குடி மீராசா ஆண்டவர் ஜமாத் கமிட்டித் தலைவர், காயிதே மில்லத் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை, கிரஸண்ட் பள்ளியின் தலைமையாசிரியை, அருண் மெட்ரிக் பள்ளியின் தலைமை ஆசிரியை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

இறுதியாக அன்னை ராபியா அறக்கட்டளையின் நிர்வாகி அய்யூப் கான் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவிற்கு பிறகு இளம் சாதனையாளர் மஹ்மூத் அக்ரமோடு மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

காலை 10 மணிக்கெல்லாம் மண்டபத்தின் உள் அரங்கம் மாணவர்களாலும், பெற்றோர்களாலும் நிரம்பியது. புளியங்குடியில் முதன் முதலாக நடைபெற இருக்கும் இக்கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு அதிகமான மாணவர்களும், பெற்றோர்களும் வருகை தருவார்கள் என்பதை முன்னரே அறிந்திருந்ததால் அனைவரும் நிகழ்ச்சியைக் கண்டு பயன் பெறும் வகையில் மண்டபத்தின் வெளிப் பகுதியில் இரண்டு தொலைக்காட்சிகள் பொருத்தப்பட்டன. அதிக அளவில் இருக்கை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டன. வருகை தந்தவர்களுக்கு தேநீர் விருந்தும் அளிக்கப்பட்டது.

கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தவர்களும், வளைகுடா நாடுகளில் உள்ளவர்களும் நிகழ்ச்சியை கண்டு பயன்பெறும் வகையில் யூடியூப்பில் பதிவேற்றவும், உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அன்னை ராபியா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த இந்த கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், இதுபோன்ற கருத்தரங்கில் இதுவரை கலந்து கொண்டதில்லை எனவும், புதிய அனுபவத்தையும் ஊக்கத்தையும் தந்ததாக கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் விழாவிற்கான ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும், விழாவின் நிகழ்ச்சி நிரல் பாராட்டுக்குரியது எனவும் கருத்து தெரிவித்தனர். இதுபோன்ற கல்வி கருத்தரங்குகளையும், சுயதொழில்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கையும் அன்னை ராபியா அறக்கட்டளை எதிர் வரும் காலங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அன்புக் கட்டளையும் இட்டனர்.

விழா நிறைவு பெற்ற பின்பு மாணவர்களும் ஆர்வத்துடன் மொழிப் புயல் மஹ்மூத் அக்ரமோடு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். அத்தருணத்தில் நாமும் இவரைப் போன்று சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் புளியங்குடி மாணவர்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

விழா புகைப்படங்கள்

















விழாவிற்கான அழைப்பிதழும், பேனர்களும்





Share:

0 comments:

Post a Comment

அன்னை ராபியா அறக்கட்டளை

அன்னை ராபியா  அறக்கட்டளை

ஹிக்மத் அகாடமி

ஹிக்மத் அகாடமி

பார்வையாளர்கள்