அன்னை ராபியா அறக்கட்டளை

Tuesday, August 20, 2019

அன்னை ராபியா நினைவு விருதுகள் - 2019

அன்னை ராபியா நினைவு சமூக சேவகர் விருது
கிணறு, ஆறு, குளம் உள்ளிட்ட நீர் ஆதாரங்களை பாதுகாக்கத் தவறியதன் விளைவு புளியங்குடியில்கூட தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டது.

நாளுக்கு நாள் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வரும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு களத்தில் இறங்கிய குழுவினர்தான் புளியங்குடி 'கிணறுகள் பாதுகாப்புக் குழுவினர்'.

ஒரு காலத்தில் மக்களின் நீர் ஆதாரமாக விளங்கிய ஜின்னா நகர் 5ஆவது தெரு கிணறு, 3ஆவது தெரு கிணறு, கே.டி.எம். தெரு கிணறு உள்ளிட்ட கிணறுகள் பல வருடங்களாக குப்பைகள் கொட்டும் இடமாக மாறியிருந்தது. அக்கிணறுகளை பெரும் முயற்சி எடுத்து, தூர் வாரி மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த அரும் பணியை செய்து வருகின்றனர் கிணறுகள் பாதுகாப்புக் குழுவினர்.

எந்தவொரு சமூகப் பணிக்கும் அதற்கான அங்கீகாரமும், ஊக்கமும் மிக முக்கியமானது. அதுவே அவர்களை தொடர்ந்து இயங்கச் செய்யும். அதன்படி, கிணறுகள் பாதுகாப்புக் குழுவினரான சிக்கந்தர், ஜாபர் அலி, முஸாபர் அஹமது ஆகியோருக்கு அன்னை ராபியா அறக்கட்டளை சார்பாக அன்னை ராபியா நினைவு சமூக சேவகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அன்னை ராபியா நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது
புளியங்குடியின் அடையாளமாகத் திகழும் உயர்திரு கோமதி நாயகம் அவர்களுக்கு அன்னை ராபியா அறக்கட்டளையின் சார்பாக 2019 ஆம் ஆண்டுக்கான அன்னை ராபியா நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மதிப்பிற்குரிய புளியங்குடி கோமதி நாயகம் அவர்கள் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். மகாத்மா காந்தி வகுத்தளித்த ஆதாரக்கல்விப் பயிற்சி ஆசிரியராக இருந்ததால் காந்திஜியின் நிர்மாணத்திட்டங்களில் ஆர்வம் நிரம்பியவர். 40 ஆண்டுகளுக்கு முன்பு புளியங்குடியில் விவசாய சேவா சங்கத்தை நிறுவினார். இச்சங்கம் புளியங்குடி சுற்று வட்டாரப் பகுதியில் விவசாய மறுமலர்ச்சிக்கு பேருதவி புரிந்தது.

சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் இயற்கை விவசாயத் தொழில் நுட்ப வல்லுனர்கள், வனத்துறை, தோட்டக்கலைத்துறை, நறுமணப்பொருள் வாரியம் சார்ந்த வல்லுநர்களை வரவழைத்து உரையாற்ற வைத்து விவசாயிகளுக்கு பல்லுயிர்ப் பெருக்கம், நீர்வள நிர்வாகம், சிக்கன வீடு கட்டுதல், இயற்கை விவசாயம், மூலிகை மருத்துவம், மரம் நடுதல், சாண எரிவாயுத் தொழில்நுட்பம் உள்ளிட்ட நுட்பங்கள் கற்றுத்தரப்பட்டது.

ஆயிரக்கணக்கான மரங்களை நட்டுள்ளார். வீதியெல்லாம் சோலை, ஒற்றை ரூபாய்த் திட்டம், இல்லம் தோறும் இயற்கை உணவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை வகுத்தளித்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற இரு விவசாயிகள் ஜனாதிபதியிடம் விருது வாங்கியுள்ளனர். விவசாயம் பற்றிய எண்ணற்ற கட்டுரைகளை பல இதழ்களில் எழுதியுள்ளார். சமீபத்தில் நியூஸ் 18 தொலைக்காட்சி இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. கோமதி நாயகம் ஐயாவின் பேருக்கும், புகழுக்கும் பணிக்கும் எங்களின் கௌரவிப்பு மிகச் சிறியதுதான். ஆயினும் சமகாலத்தில் நம்மோடு வாழும் ஆளுமையை அவர் வாழும் காலத்திலேயே கௌரவித்த திருப்தியை அன்னை ராபியா அறக்கட்டளை பெறுகிறது.

குறிப்பு:
திடீர் உடல் நலக்குறைவால் அவரால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. அவரது சார்பாக அவரது உற்ற நண்பர் வேலு முதலியார் அவர்களின் பேரர் விருதைப் பெற்றுக் கொண்டார். பின்னர் கோமதி நாயகம் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவர்களிடம் விருதை அளித்து மகிழ்ந்தோம்.

விழாவுக்கான  துண்டுப் பிரசுரம்:





விழா புகைப்படங்கள்:
























Share:

0 comments:

Post a Comment

அன்னை ராபியா அறக்கட்டளை

அன்னை ராபியா  அறக்கட்டளை

ஹிக்மத் அகாடமி

ஹிக்மத் அகாடமி

பார்வையாளர்கள்